அடிக்கடி கேட்கப்படும் - TopicsExpress



          

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் PDF ஆக பெற உளவியல் ஆலோசனை என்றால் என்ன? உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலியமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள். இங்கு அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. உங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை/ஆற்றுப்படுத்துதல் என்கிறோம். உளவியல் ஆலோசகர் என்பவர் யார்? உளவியல் (Psychology), சமூகப்பணி (Social Work) , ஆற்றுப்படுத்துதல் & வழிகாட்டுதல் (Counseling & Guidance) ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் (Post Graduation) பெற்றிருப்பார். எந்த ஒரு பாகுபாடும், நிபந்தனையும் இன்றி, உங்கள் பிரச்ச்சனைகளை வைத்து உங்களை தவறாக நினைக்காது உங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நல்லுள்ளம் கொண்டவர். “மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்”, “ஒவ்வொரு தனிமனிதனும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், தனித்தன்மை உடையவர்கள். ஆகவே ஒவ்வொரு தனிமனிதனின் பிரச்சனைகளும், மற்றவர்களின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டவை.” என உறுதியாக நம்புபவர். குறிப்பிட்ட சில உளவியல் முறைகளை பயன்படுத்தி உங்களை மேம்படுத்தவும், உங்கள் பிரச்சனைகளை தீர்க்கவும், பின்னால் வரக்கூடும் பிரச்சனைகளை தடுத்துக் கொள்ளவும் உதவி செய்பவர். உளவியல் ஆலோசனை என்பது எதற்காக? நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள் என நம்பினாலும், சில நேரங்களில் மற்றவரிடம் உதவி பெறுவது என்பது நடைமுறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதை ஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது” என்பது ஒரு தனிமனிதனின் பலம் என்று சொன்னால் அது மிகையாகாது. பின்வரும் தருணங்களில், உளவியல் பூர்வமான உதவியை நாடுவது மிகவும் அவசியம். அளவுக்கு அதிகமான மன உளைச்சல் இருந்து, அது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் போது மனதை சூழ்ந்து கொள்ளும், கட்டாயப்படுத்தும், எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத, முறையற்ற எண்ணங்கள் எழும் பொழுது மன அழுத்தத்துடன் சமாளிக்க இயலாமை மணவாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் ஆகியவற்றில் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படும்போது படிப்பு/வேலையில் பிரச்சனைகள்/குழப்பம் நீடித்த மனச்சோர்வு, பயம்/கவலை தூக்கமின்மை/அதிக தூக்கத்தால் வேலைத்திறன் பாதிக்கப்படும்போது வாழ்க்கை வாழ விருப்பம் குறையும்போது நினைப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும்போது விருப்பம், திறன்கள், நீதி நெறிகளில் குழப்பம் ஏற்படும்போது தற்கொலை, தற்காயப்படுத்தும் எண்ணங்கள் ஏற்படும்போது ஏன் ஒரு நண்பரிடமோ/நலன்விரும்பியிடமோ ஆலோசனை செய்யக்கூடாதா? நண்பர்களும், நலன்விரும்பிகளும் உங்கள் வாழ்க்கையின் முக்கிய நபர்கள். அவர்களுடன் பேசுவது உங்கள் பிரச்சனைகளை தீர்க்கவும், வாழ்வை மேம்படுத்தவும் உதவ முடியும், எனினும் அதில் சில பிரச்சனைகள் உள்ளன. அவர்களால் உங்கள் பிரச்சனைகளை நடுநிலையுடன் பார்க்க முடியாமல் போகலாம். உங்களை வெகு காலமாக அவர்களுக்கு தெரியும் என்பதால், நீங்கள் ‘இப்படிப்பட்டவர்தான்’ என்பது போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். ஆகவே அவர்களின் சொந்தக்கருத்துக்களை, அனுபவங்களை உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வாக சொல்ல வாய்ப்பு அதிகம். உளவியல் ஆலோசகரை எடுத்துக்கொண்டீர்களானால், உங்களையும் உங்கள் பிரச்சனைகளையும் உளவியல் ரீதியான, நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அடிப்படையாய் வைத்து நடுநிலைமயுடன் உங்களுக்கு உதவுவார். உளவியல் ஆலோசனை எப்படி எனக்கு உதவும்? புதிய/வேறுபட்ட முறையில் சிந்தித்தும், சரியான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும், உங்கள் தினசரி வாழ்வின் பிரச்சனைகள்/இழப்புகள்/கருத்து வேறுபாடுகளை சரி செய்ய உளவியல் ஆலோசனை உதவும். உளவியல் ஆலோசனையின் தொழில் நீதிநெறிகள் என்னென்ன? உளவியல் ஆலோசனை என்பது ‘தானே விரும்பி முன்வருபவருக்கே’ அளிக்கப்படும். நீங்கள் அளிக்கும் அனைத்து விஷயங்களையும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். உங்கள் தனி நபர் விவரங்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. உங்கள் கலாச்சாரம், பின்புலம் ஆகிவற்றை மனதில் வைத்து உளவியல் ஆலோசனை வழங்கப்படும். உங்களுக்கும், உளவியல் ஆலோசகருக்கும் உள்ள உறவு தொழில் முறை உறவு மட்டுமே. வயது, பால், கலாச்சாரம், உடல் குறை, சாதி, சமயம், பாலுறவு முறை போன்ற எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். உங்களுக்கு உதவ வேண்டிய அளவுக்கு தனக்கு திறன்கள் இல்லையென்று ஒரு ஆலோசகர் கருதினால், உங்களுக்கு சரியாக உதவக்கூடிய வேறு ஒரு ஆலோசகரை/மனநல மருத்துவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவார். உளவியல் ஆலோசனை மூலம் யார் அதிகமான பலன்களை பெற முடியும்? என்னுடைய முயற்சிகள் பிரச்சனையை தீர்க்க உதவவில்லை; ஆகவே உளவியல் ஆலோசனை உதவி பெற்று என் பிரச்சனைகளை தீர்க்க நான் இங்கு மனம் விரும்பி வந்துள்ளேன். இங்கு கிடைக்கும் ஆலோசனைகளை கடைபிடிக்க நிச்சயமாக முயற்சி செய்வேன். அந்த முயற்சியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், தயங்காது மீண்டும் உளவியல் ஆலோசனை பெற வருவேன்” என்று எண்ணி, திறந்த மனதுடன் வருபவர் அதிக பலன்களை பெற முடியும். ஒரு வேளை நான் பிரச்சனைகளை தீர்க்காது, உளவியல் ஆலோசனை பெறவும் வராது இருப்பின் என்ன ஆகும்? பிரச்சனைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருந்தால், உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பிரச்சனைகள் பெரிதாகலாம், சிக்கலாகலாம். உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் அது பெரிய வகையில் பாதிக்க வாய்ப்பு உண்டு. மனநல மருத்துவருக்கும் (Psychiatrist), உளவியல் ஆலோசகருக்கும் (Counselor) என்னென்ன வேறுபாடுகள்? மனநல மருத்துவர் என்பவர் மனநோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியவர். உளவியல் ஆலோசகர் என்பவர் மனதில் ஏற்படும் சலனங்களை, தினசரி பிரச்சனைகளை தீர்க்க உதவுபவர். சில நேரங்களில் மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் ஒரே மாதிரியான பிரச்சனைகளை கையாண்டாலும், இருவரின் சிகிச்சை முறைகளும் வேறுபட்டவை. மனநல மருத்துவர் மனோதத்துவத்தில் (Psychiatry) M.D படித்து முறையாக பயிற்சி பெற்றவர்கள்; மனநல மருந்துகள் அளிக்க அங்கீகரிக்கப்பட்டவர்கள். உளவியல் ஆலோசகர் என்பவர் உங்களின் பிரச்சனைகளை வரையறுத்து, உங்களை தெளிவாக சிந்திக்க தடுக்கும் தடைகளை கண்டுபிடிக்கக்கூடியவர். அந்த குறிப்பிட்ட தடைகளை போக்க, உங்களுடன் (தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களுடனும்) இணைந்து, நடைமுறைக்கு ஒத்துவரும் உளவியல் பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்க உதவுபவர். மனச்சிதைவு, மனச்சோர்வு, அடிமைப்பழக்கங்கள் போன்ற சில மன பிரச்சனைகளுக்கு மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் இணைந்து சிகிச்சை அளிப்பதுண்டு.
Posted on: Tue, 26 Nov 2013 02:59:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015