முருகன் தமிழ்க் கந்த - TopicsExpress



          

முருகன் தமிழ்க் கந்த புராணத்தில் முருகன், சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களாகத் தோன்றுகிறான். அவை எந்தத் தாயின் கருப்பையிலும் கிடந்து வளர்ந்து பிறந்ததாகக் கூறப்படவில்லை. ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க தாய் வயிற்றில் தங்கிப் பிறவாமல் சுடராய்த் தோன்றி (விந்து நீரில் அல்ல) குழந்தையாய் உருவம் காட்டினான். முருகனின் தோற்றத்தை (அவதாரமல்ல) கடவுள் நிலைக்குச் சற்றும் இழுக்கு வராமல் காட்டிகிறது தமிழ்க் கந்த புராணம். பாடல் வருமாறு: அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகிக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன்வந் தாங்கு உதித்தனன் உலகம் உய்ய. பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு ஓர் மேனியாக உருவம் கொண்டது – கருணையால் என்று தமிழ்க் கந்த புராணம் கூறுவதைக் காண்க. இந்தக் கந்த புராணத்தைக் காஞ்சி குமரகோட்டக் கந்தனே மெய்ப்பு (PROOF) திருத்தினான் என்று ஒரு வரலாறு கூறுவர். எனவே இது கந்தனே ஏற்ற நூல் என்று அறிகிறோம். சிவபெருமானின் மகன் என்பதால் சேயோன் என்று முருகனுக்குப் பெயர். சேய் என்றால் மகவு என்று பொருள். சிவபெருமானே முருகன். தனக்குத்தானே சேய் போல வந்தான். இது ஒரு விளையாடல். ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்! “ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால் (சிவபெருமான் கூறுவது) என்பன போன்ற கச்சியப்பரின் கந்தபுராண வாக்குகள் இதனை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. மேலும் பரம்பொருளான பிரமமே நமக்கெல்லாம் கருணை செய்ய சோதிப் பிழம்பு என்ற நிலையில் இருந்து முருகன் என்ற உருவம் எடுத்தது என்று கூறும் மேற்காட்டில் ‘அருவமும்’ எனத் தொடங்கும் கந்த புராணப் பாட்டும் இதற்கு சான்று பகரும். சேயோன் என்ற தமிழ்ச் சொல்லும் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் பொதுவாகச் சென்று சேரும். சே என்ற ஓரெழுத்தொரு மொழிக்கு சிவப்பு, சிவந்த ஒளி என்று பொருள் என நிகண்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் பவளம் போல் மேனியை உடையனாக மணிவாசகர் கூறுகிறார்!. ‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்’ என்பது அவர் வாக்கு. எனவே சேயோன் என்பது செம்மைப் பண்பைக் குறித்து சிவனையும், சிவனது மகன் அதாவது சேய் என்ற பொருளில் முருகனையும் குறிக்கும். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்தபுராணம் காட்டும் கருத்திற்கு ஏற்ப சேயோன் என்ற சொல் துணை நிற்கிறது என்று கூறலாம். சேயோன் என்ற இந்தச் சொல்லையே தமிழ் இலக்கணமான தொல்காப்பியமும் எடுத்துக் கொள்கிறது. ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்பது தொல்காப்பிய நூற்பா வரியாகும். அதாவது உலகத்தை நான்கு வகை நிலங்களாக வகுத்து அந்தந்த நிலத்திற்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைத் தமிழ் சான்றோர்கள் எனக்கு முன்னம் இப்படிக் கூறிவைத்தனர் என்று சொல்ல வந்த தொல்காப்பியர் குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சார்ந்த நிலத்தினைக் குறிக்கும் என்றும் அதற்குத் தலைவன் சேயோன் என்றும் கூறுகிறார். மலைக்குத் தலைவன் முருகன் என்று கூறாமல் சேயோன் என்ற சொல்லைத் தொல்காப்பியர் கொண்டதனால் சிவபெருமானையும் அந்தச் சொல்லில் அடக்கிக் காட்டினார் என்று கொள்க. ‘மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று நிலங்களின் தெய்வங்களைக் கூறியவர் வருணன், இந்திரன் என்கிற சிறு தெய்வங்களையும், மால், முருகன் என்கிற பெருந்தெய்வங்களையும் கூறியவர் தமிழர்களால் பரம்பொருளாக வணங்கப்பட்டவரும், தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் ஆகிய சிவபெருமானைச் சொல்லாமல் விட்டால் அது குன்றக்கூறிய குறைக்கு ஏதுவாகும். எனவே சிவபெருமானையும், முருகனையும் ஒரு சேரக்குறிக்கும் சேயோன் என்ற சொல்லால் சிவபெருமானையும் அங்கே உள்ளடக்கினார் என்பதே கூர்ந்த உணர்வினரால் உணரக் கிடக்கிறது. சிவபெருமான் இருப்பிடமும் மலை என்றே புராணங்களும் கூறுகின்றன. அவன் இருப்பது வெள்ளிமலை எனப்படும் இமயமலை. அவன் அயனுக்கும், அரிக்கும் காட்சி கொடுத்தது அண்ணாமலை. இன்னும் திரு ஈங்கோய் மலை, காளத்தி மலை, திருக்கழுக்குன்றம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவன் மலையையே வில்லாகக் கொண்டவன். இப்படி சிவபெருமானுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பு நன்றாகத் தெரிந்த ஒன்று. மலையோடு தொடர்புள்ள சிவபெருமானது மகன் எனக் கூறப்படுகிற முருகனுக்கும் மலையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. குன்று தோறாடும் குமரன் என்று முருகனுக்குப் பெயர் உண்டு. எனவே முருகனையும் சிவபெருமானையும் ஒரு சேரக்குறிக்கும் சொல்லான சேயோன் என்கிற சொல்லைத் தொல்காப்பியர் தேர்ந்தெடுத்தார். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்த புராணக்கருத்து கச்சியப்பர் கற்பித்ததல்ல என்றும், தொல்காப்பியர்க்கு பலகாலம் முன்னதாகவே தமிழ்ச் சான்றோர் கருத்து அது என்றும், அதைத் தொல்காப்பியரும் தழுவினார்; கச்சியப்பரும் பொன்னே போல் போற்றி வழி மொழிந்தார் என்று உணர்தல் வேண்டும். எனவே, இது காறும் கூறியவற்றால் முருகன் யார் என்ற கேள்விக்கு விடை:சோதிப்பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டு கருணை கொண்டு தனக்குத்தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு வர அந்த சோதிப்பிழம்பாகிய பரம்பொருளே முருகன். (மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமுருகாற்றுப்படை புத்தகத்தில் இருந்து)
Posted on: Thu, 20 Jun 2013 03:32:02 +0000

Recently Viewed Topics




© 2015