"மாற்றம் - TopicsExpress



          

"மாற்றம் தேவை" -------------------------- Saiva Sarabam M.Pattamuthu இன்றைய பள்ளிச்சாலைகளில் நாம் பயிலும் விஷயங்கள் நமது ஆன்ம லாபத்திற்கு எந்த அளவு துணை புரிகிறது என்று அறிதல் இன்றியமையாதது. தனிப்பட்ட மதபோதனை கல்வி நிலையங்களில் இடம் பெறக் கூடாதாம். ஆனால் அறநெறிப் போதனையை (Moral Instruction) அலட்சியம் செய்தலும் கூடாதாம். இது இப்போது நிலவும் கொள்கை. கல்வியின் பயன் என்ன என்பது பற்றி நன்கு சிந்தியாத, சிந்திக்க மறுக்கும் மாந்தரின் செயலால், சமயபோதனையை முற்றிலும் மறந்து நிற்கிறது நமது தமிழகம். திருவள்ளுவரின் "கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின்" என்ற பாடல் கல்விக் கொள்கையை உருவாக்குவோர் உளத்தில் அழியா இடம் பெறவேண்டிய பாடலாகும். வாலறிவன் யார்? அவன் நற்றாள் தொழும் நெறி யாது? இவற்றைத் தெற்றென அறிந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நாட்டம் நம்பாலில்லை. ஆனால், கடவுள் பக்தியிலிருந்து நமது உளத்தை விலக்கி, இலெளகீக விஷயங்களில் அதனை அழுத்திக் கல்வியின் பயனை இழக்கச் செய்துவிட்டது இன்றைய நிலை. மொழிப் பாடங்களில் அளவுக்கு மீறிய காதற்பாக்கள், போர்க்களப்பாக்கள், அவற்றில் வரும் அணிகள் ஆகியவற்றுக்கே கல்விச்சாலைகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இறைவன்பால் அன்பு பெருக்கும் பாடல்கள் பாடத்திட்டத்தில் மிகக் குறைந்த இடமே பெற்றுள்ளன என்பதில் நமது சிந்தனையைச் செலுத்துதல் நமது கடனாம். விஞ்ஞான விஷயங்கள் அதிகம் கற்கக் கற்க இயற்கையின் ஒருமைப்பாடு உணர்ந்து பரம்பொருளிடம் பக்தி கொள்ள வேண்டிய நிலைக்கு மாறாக. நாஸ்திக மனப்பான்மை கொள்வோரின் எண்ணிக்கை அச்சந் தருவதாகப் பெருகியுள்ளது. வான வெளியில் கடவுளைக் காணவில்லையே என்று ஒருவான வெளி வீரர் கூறினாராம். அதனைக் கண்டித்த ஒரு மேதை. "God is not away in an orbit 300 miles above us. He is within us and within every particle in the space occupied by the stars and beyond" என்று நயம்படக் கூறினார். இலெளகீக விஷயங்களை வலியுறுத்தும் பொருளாதாரம், அரசியல், வரலாறு போன்ற பாடங்கள் அதிக முக்கியத்துவம் அடைந்து வருவதை இன்று காண்கிறோம். இங்ஙனம் சமய அறிவே ஏற்படாத வழியில் இப்போது கல்விக் கழகங்கள் செயல்படுகின்றன. இனி, "ஒழுக்கம், அன்பு, கற்பு, பொறுமை இவை போன்ற அறங்கள் இருந்தாலே போதும். கடவுள் பக்தி என்ற ஒன்றிற்கு பள்ளிச்சாலையில் அவசியமே இல்லை" என்று கூறுவாருமுளர். "அவ்வொழுக்க முதலிய நன்மைகளையுடையனாய், அவற்றை மறுதலைத்த தீமைகளை நீக்கிய்யொழுகுவானொருவனுக்குத் தன் கருத்திற்கியைந்ததொரு கடவுளை மனமொழி மெய்களான் வழிபட்டு வாழுஞ் செயலாகிய அறமுமுனதாயின், முன்னைப் பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளாகிய சிவபிரானே அத்தெய்வத்தினிடமாக நின்று அச்செயலை யேற்றுக்கொண்டு பயனுதவு மென்பதாம்", "மேற் கூறிய வொழுக்க முதலிய அங்கங்கட்கு ஈண்டுக் கூறிய அறம் அங்கியாகலின்" என்னும் ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகளின் அருள்வாக்கு (சிவஞான சித்தியார் 2-2-24) ஈண்டு உணரற்பாற்று. ஒழுக்கம் முதலியவை அங்கம். அதனையுடைய அங்கி கடவுள்பக்தி என்பது நமது உளத்தில் அழியா இடம் பெற வேண்டிய உண்மையாகும். மதத்தை மறந்து, உலக வாழ்வுச் சூழலில் மயங்கிக் கிடக்கும் நிலை இளம் பாலர்களுக்கு இனியும் ஏற்படா வண்ணம் நாம் கல்வியில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவோமாக
Posted on: Sun, 30 Jun 2013 06:13:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015