அமெரிக்க டாலருக்கு - TopicsExpress



          

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் வெளிமதிப்பு குறைந்ததால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல இந்தியர்கள் தயங்குகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக சரிவடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவடைவதால் அதிக விலை கொடுத்து டாலர்களை வாங்க வேண்டியிருக்கும். இதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் காலங்களில் வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். அதே சமயம், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. டாலர்களை ரூபாயாக மாற்றும்போது அதிக தொகை கிடைப்பதே இதற்கு காரணமாகும். சொல்லப் போனால் ரூபாய் மதிப்பு சரியும்போது சர்வதேச பயணிகளுக்கு இந்தியா ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மாறி விடுகிறது. ரூபாயின் வெளிமதிப்பு அதிகமாக இருந்தபோது, தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனாவில் 3 இரவுகள் மற்றும் 4 பகல் பொழுதுகள் தங்குவதற்கான செலவு, உள்நாட்டில் கோவா மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இதே நாட்கள் தங்குவதற்கு ஆகும் செலவை விட குறைவானதாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு டாலர் மதிப்பு ஏறக்குறைய ரூ.60–ஐ தொட்டபோது ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. கடந்த ஆண்டில் ஐரோப்பாவிற்கு 10 நாள் சுற்றுலா செல்லும் ஒருவர் ரூ.1.50 லட்சம் செலவழிக்க வேண்டியிருந்தது. இன்றைய நிலையில் இந்த செலவு ரூ.2 லட்சமாக எகிறி விட்டது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை 15–20 சதவீதம் சரிவடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Posted on: Thu, 25 Jul 2013 05:20:04 +0000

Recently Viewed Topics




© 2015