தமிழக அரசாங்கத்திற்கு - TopicsExpress



          

தமிழக அரசாங்கத்திற்கு நான் அளிக்கவிருக்கும் மனுவின் நகல் முதன்மைச் செயலாளர் தமிழக அரசு சென்னை பொருள் :திருவள்ளுவர் சிலை சம்பந்தமாக மதிப்புக்குரிய முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு கன்னியாகுமரியில் எழுப்பப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மீதான சில முரண்பாடுகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டியே, அது சம்பந்தமான தகவல்களையும் எனது வேண்டுகோளையும் கொண்ட இந்த மனுவை தங்களிடம் கையளிக்கிறேன். திருவள்ளுவர் சிலை என்று கூறப்படும் குறிப்பிட்ட கட்டுமானம் , பீடத்தில் 38 அடி அளவையும் , அதைத் தவிர்த்த 95 அடி என்பது முழு உருவத்தையும் குறிப்பதாக அமைக்கப் பட்டு , மொத்தமாக 133 அடியில் நிர்மாணிக்கப் பட்டு , சனவரி 1, 2000 மாவது ஆண்டு அப்போதைய முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பட்டது நாம் அறிந்ததே. ஆனால், நம்மை அதிர்ச்சியூட்டும் விதத்தில் , பாரம்பரியமாக தமிழ் சிற்பக் கலையில் கடைபிடிக்கப் படும் ஒரு சிலைக்கு உண்டான எந்தவித தன்மையையும் அது கொண்டிருக்கவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரியப் படுத்த கடமைப்பட்டுள்ளேன். குறிப்பிட்ட இந்த சிலை எனக் கூறப்படும் கட்டுமானத்தில் காலம் காலமாக கடைபிடிக்கப் படும் சிற்ப சாத்திரத்தின், அந்த உன்னதக் கலையின் எந்த அடிப்படைகளையும் கடைபிடிக்காமல் , கல்லினால் ஒரு உருவத்தை அதற்கேற்ற சாஸ்திர அளவுகளில் இல்லாமலும் முப்பரிமாணம் எனச் சொல்லப் படும் ஒரு சிலைக்கு உண்டான பூரணத்துவம் இன்றியும் மனம் போன போக்கில் அமைக்கப் பட்டுள்ளது. உண்மையில் திருவள்ளுவருக்கு ஒரு சிலை அமைப்பதாக முடிவெடுத்து திரு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அன்றைய இந்தியப் பிரதமர் திரு.மொராஜி தேசாய் அவர்களால், சிலை அமைப்பதற்கான அடிக்கல் 15/04/1979 அன்று நட்டப் பட்டது தாங்கள் அறிந்ததே. அதன் பிறகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது அதற்கான ஆரம்பகட்டப் பணிகளுக்காக 1.28 கோடி ரூபாய் நிதி உதவியும் செய்யப் பட்டது. ஆனால் எந்த உயரிய நோக்கத்தில் திருவள்ளுவருக்கு என்று ஒரு மாபெரும் சிலை அமைக்கவேண்டும் என்ற தமிழ் மக்களின் கனவை மெய்ப்பிக்க முயற்சிகள் எடுக்கப் பட்டதோ, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலேயே தற்போது அங்கு அந்த சிலை எனப்பபடும் கட்டுமானம் அமைந்திருப்பது வேதனைக்குரியது. ஒரு சிலை என்பதற்கான அடையாளங்கள் என்ன, எந்த அளவீடுகளை வைத்து ஒரு சிலை அமைக்கப் பட வேண்டும் , எந்த விதமான பரிமாணத்தில் ஒரு சிலை அமைந்திருக்க வேண்டும் என்று சிற்ப சாத்திரம் தெளிவாக வரையறை செய்திருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட இந்தக் கட்டுமானம் இவை எவற்றையும் மனதில் கொள்ளாமல், மரபை மீறி அவசர கதியில் ஈடுபாடின்றி அலட்சியப் போக்குடன் நிறுவப் பட்டுள்ளது என்பதை திருவள்ளுவர் சிலை எனப் படும் இந்த கட்டுமானத்தின் பின்பகுதியைக் கொண்டு அறியலாம். ஒரு தட்டையான, எந்த விதமான முழுமையும் இன்றி இந்த சிலையின் பின்பகுதி அமைந்திருப்பது, சிற்பக் கலையில் உச்சத்தில் நின்ற தமிழ் பெருங்குடிகளின் இந்தத் தலைமுறையினருக்கு ஒரு அவமானத்தைத் தேடித் தருவதாக அமைந்துள்ளது. ஆகவே இது வெறும் ஒரு கல்லாலான ஒரு கட்டுமானம் அல்லது கட்டிடம் என்பதைத் தாண்டி ஒருபோதும் இதைச் சிலை என்று குறிப்பிடுவது வள்ளுவனுக்கும் தமிழுக்கும் நாம் கொண்டு வரும் இழுக்குதானே தவிர வேறில்லை. ஒரு சிலை அமைக்கப் படும்போது முறையாகப் பின்பற்றப் பட வேண்டிய சாஸ்திரங்களில் சில : 1) விசுவதர்மம் 2) விசுவேசம் 3) விசுவசாரம் 4) விருத்தம் 5) மிகுதாவட்டம் 6) நளம் 7) மனுமான் 8)பானு 9) கற்பாரியம் 10)சிருஷ்டம் 11) மானசாரம் 12) வித்தியாபதி 13) பாராசரியம் 14) ஆரிடகம் 15) சயித்தியகம் 16) மானபோதம் 17) மயிந்திரமால் 18) வஜ்ரம் 19) ஸௌம்யம் 20) விசுவகாசிபம் 21) கலந்திரம் 22) விசாலம் 23) சித்திரம் 24) காபிலம் 25) காலயூபம் 26) நாமசம் 27) சாத்விகம் 28) விசுவபோதம் 29) ஆதிசாரம் 30)மயமான போதம் 31) மயன்மதம் 32) மயநீதி ஆனால் இவை இங்கு முறையாகப் பின்பற்றப் படவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிலை நிர்மாணிக்கப் படும்போது அதில் நடந்திருக்கக் கூடிய தவறுகள் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க அரசு முயற்சி செய்த போதும், அந்த இரு நபர்க் குழுவினர், மேற்கண்ட கட்டுமானத்தை அமைத்த கணபதி ஸ்தபதி அவர்களின் சீடர்கள் என்பதால் தவறுகள் மூடி மறைக்கப் பட்டது என்பதும் அன்றைய செய்தி ஏடுகளில் பார்க்கக் கிடைக்கிறது. தமிழ் சிற்பக் கலை, உலகத்திலேயே மிக உன்னதமான இடத்தைக் கொண்டிருப்பது. தமிழ் மன்னர்கள் சிற்பக் கலையை சிற்பிகளைப் போற்றி பாதுகாத்து வளர்த்தார்கள். இன்றும் தமிழ் கலாசாரத்தையும் பண்பாட்டையும் ஒப்பற்ற நாகரீகத்தையும் இந்த உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருப்பது ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தஞ்சைப் பெரிய கோவில் போன்ற ஒப்பற்ற சிலைகளும் சிற்பக் கட்டுமானங்களும் தான். முக்கியமாக இத்தகைய பழம் பெருமையை அறிந்து கொள்ளும் பொருட்டு இங்கே தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஏனைய இந்திய மாநிலத்தவரும், செவி வழிச் செய்தியை நம்பி – திருவள்ளுவரைக் காணப் போகிறோம் என்னும் உணர்வால் உந்தப்பட்டு வரும்போது, நம்முடைய பெருமைகளை எல்லாம் மங்கச் செய்யும் அளவுக்கு , எவ்வகையிலும் முழுமை அடையாத ஒரு உருவத்தை நாம் நிறுவி இருப்பது கவலைக்குரிய விடயமாகும். தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சிக் காலத்திலேயே , இத்தகைய அவலத்தைக் களையவும், போதுமான மாறுதல்களை இந்தக் கட்டுமானத்தில் மேற்கொள்ளவும், வேண்டுமெனில் இந்த சிலையையே கூட அகற்றி வேறு ஒரு சிலையை முறைப்படி - சாஸ்திரப் படி அமைக்கவும் ஆவன செய்யுமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதுவரை அரசின் ஏனைய விளம்பரங்களில் இந்த சிலையின் படத்தை உபயோகிப்பதை நிறுத்தி வைக்கவும், அரசிதழில் மற்றும் சுற்றுலாத் துறையில் அடிக்கடி கையாளப் படும் திருவள்ளுவர் "சிலை" என்பதையும் அகற்றி தமிழ் தமிழர் மாண்புக்கு எவ்வகையிலும் பங்கம் நேராத வண்ணம் நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று உள்ளார்ந்து நம்புகிறேன். இந்தக் கோரிக்கையையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி ! வணக்கம் !! என்றும் தங்கள் உண்மையுள்ள கிஷோர் கே ஸ்வாமி
Posted on: Mon, 07 Oct 2013 13:33:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015