ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் - TopicsExpress



          

ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி! ஆ. பழனியப்பன் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? நாட்டை நேசிப்பவரா நீங்கள்? அப்படியானால் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். பயங்கரமான ஒரு சூழ்நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் எட்டு மாதங்களில், அதாவது அடுத்தாண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் 172 பில்லியன் டாலர் (10 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்). அதைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பது பெரிய கேள்வி. அப்படித் திருப்பிச் செலுத்தும்போது நம் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியில் 60 சதவிகிதம் நாட்டை விட்டு வெளியேறிவிடும். சுருக்கமாகச் சொன்னால் 1991-ஆம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக 400 கிலோ தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் அடகு வைத்தோமே, கிட்டத்தட்ட அந்த நிலையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது நாடு. ஏன் திடீரென இப்படி ஒரு நிலை? திடீரென்று ஏற்பட்டுவிட்ட நிலை அல்ல. கடந்த ஆறாண்டுகளில் நமது வெளிநாட்டுக் கடன் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. கடன்களில் இரண்டு வகை. ஒன்று, குறுகிய காலக் கடன். மற்றொன்று, நீண்ட காலக் கடன். நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்காக நாம் உலக வங்கி போன்ற நிறுவனங்களில் வாங்கும் நீண்டகாலக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவு. அதை அசலுடன் திருப்பிச் செலுத்த பல ஆண்டுகள் அவகாசம் கிடைக்கும். ஆனால் அது சில குறிப்பிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்குத்தான் கிடைக்கும். அவசரத்திற்கு கைச் செலவுக்கு, அதாவது பற்றாக்குறையை சமாளிக்க அந்தக் கடன் கிடைக்காது. அதுவும் தவிர உலக வங்கி அரசாங்கங்களுக்குத்தான் கடன் கொடுக்கும். தனியாரால் நடத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்காது. ஒரு நாட்டின் இறக்குமதி அந்த நாட்டின் ஏற்றுமதியை விட அதிகமாக இருக்கும் போது ஏற்படும் நிலைமையை நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current account deficit - CAD) என்று சொல்வார்கள். அதாவது, எளிமையாக வீட்டு பாஷையில் சொல்வதானால், வரவை விட செலவு அதிகமாகும் போது கையைக் கடிக்கும் ஒரு பற்றாக்குறை ஏற்படுகிறதே அதுதான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. 2008-09; நம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை சுமார் 2.5 சதவிகிதமாக இருந்தது. அது 2012-13-இல் கிட்டத்தட்ட 5 சதவிகிதமாக அதாவது இரண்டு மடங்கு அதிகரித்து விட்டது. இந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை வெளிநாட்டில் குறுகிய காலக் கடன் வாங்கித்தான் சமாளிக்கிறோம். இன்னொரு காரணம், நம்முடைய தனியார் துறையில் உள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள். 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியார் துறை நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. அந்த வெற்றி கொடுத்த கிறுகிறுப்பில் அவை 5 அல்லது 7 ஆண்டுகளில் திருப்பிக் கொடுக்கும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளிநாட்டில் கடன்கள் வாங்கின. அவற்றைத் திருப்பிக் கொடுக்கும் காலம் வந்து விட்டது. இந்தக் குறுகியகாலக் கடன்களால்தான் தற்போது பிரச்சினை. உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 54.7 பில்லியன் டாலர்களாக (3 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) இருந்தது. அது, இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணியில் 17 சதவிகிதம். 2011-12-ஆம் நிதியாண்டில் 34,550 கோடி டாலராகவும், 2012-13-ஆம் ஆண்டில் 39 ஆயிரம் கோடி டாலராகவும் உயர்ந்தது. தற்போது, இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடனான 10 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 44 சதவிகிதம்; இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் 60 சதவிகிதம். காரணம் என்ன? நாம் இந்த மாதிரியான நிலைமையில் வந்து மாட்டிக் கொண்டதற்கு நாம் பின்பற்றிய சில கொள்கைகளும் காரணம். அயல் நாடுகளில் வங்கி டெபாசிட்களுக்குக் கொடுக்கப்படும் வட்டி விகிதம் குறைவு. அதைப் பயன்படுத்திக் கொண்டு, அயல்நாட்டுவாழ் இந்தியர்களிடமிருந்து டெபாசிட்களை ஈர்ப்பதற்காக வங்கி டெபாசிட்களுக்கு கூடுதலாக வட்டியை அறிவித்தோம். அப்படி கூடுதலாக வட்டி கொடுப்பதற்காக கடன்களுக்கு வசூலிக்கும் வட்டியைக் கூட்டினோம். இவ்வளவு அதிக வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் செய்தால் உலகச் சந்தையில் எங்களால் போட்டியிட முடியாது என இந்திய கார்ப்பரேட்கள் முனங்கின. கவர்ச்சிகரமான வட்டியிருந்தால்தான் பணம் வரும். அதையும் விட்டுவிடக் கூடாது. அதே சமயம் இந்திய கம்பெனிகள் உலகச் சந்தையில் போட்டியிடும் நிலைமையையும் உருவாக்க வேண்டும் என்பதால் சரி, உங்களுக்கு வேண்டுமானால் வெளிநாட்டில் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அரசு சில நிபந்தனைகளோடு இந்திய கம்பெனிகளை அனுமதித்தது. நாள்பட நாள்பட நிபந்தனைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக் கொண்டது. இன்று குறுகியகால வர்த்தகக் கடன்களை அதிகளவில் திரட்டியதன் காரணமாகவே வெளிநாட்டுக் கடன் பெருமளவுக்கு உயர்ந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறுகிறது. இன்னொரு புறம் கடந்த இருபது ஆண்டுகளில் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே இறக்குமதி அளவு தாறுமாறாக அதிகரித்துள்ளது. இன்று பன்னாட்டு சந்தையில் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆனால் நம்மால் இறக்குமதியின் அளவைக் குறைக்க முடியவில்லை. முற்றும் நெருக்கடி மார்ச் 31-க்குள் நாம் வாங்கியுள்ள குறுகிய காலக் கடனை அதாவது 172 பில்லியன் டாலரைத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். ஒரு நாடு குறுகிய காலக் கடன்களை எப்படித் திருப்பிச் செலுத்துகிறது என்பதைக் கொண்டுதான் உலகம் அந்த நாட்டை நம்பிக்கைக்குரிய நாடா இல்லையா என்பதை முடிவு செய்கிறது. ஆனால் நம்மால் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறி. காரணம், அண்மைக்காலமாக இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த அதிர்ச்சியூட்டும் செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் மந்த நிலை. தொழிற்சாலைகளின் உற்பத்தியில் சரிவு. பங்குச்சந்தையில் 1,55,000 கோடி இழப்பு. 1,650 நிறுவனங்களுடைய பங்குகளின் மதிப்பு சரிவு. இந்தியாவிடம் தற்போது 236 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பு உள்ளது. ஒரு காலத்தில் 14 மாதங்களுக்கான இறக்குமதிக்கு அது சமம். இன்று 7 மாத இறக்குமதிக்குக்கூட அது போதாது. அந்நிய செலாவணி இருப்பு எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். ஏனெனில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் அந்நிய செலாவணியின் மதிப்பு மோசமடைகிறது. அந்நிய செலாவணி மதிப்பு சரியச் சரிய கையிருப்பின் உண்மையான மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த ஏழு மாதங்களாக 300 பில்லியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. கூடவும் இல்லை, குறையவும் இல்லை. இது ஒரு மோசமான அறிகுறி என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். வளர்ச்சியடைந்த நாடுகளின், குறிப்பாக ஐரோப்பா ஒன்றிய நாடுகளின் பொருளாதார மந்த நிலை உட்பட பல காரணங்களால் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதேநேரம் இந்தியாவின் இறக்குமதி குறையவில்லை. இதனால், நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் உயர்ந்து வருகிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை 2011-12-இல் 4.2 சதவிகிதமாக இருந்தது. தற்போது 4.5 சதவிகிதத்தைத் தொட்டுவிட்டது. இந்த இடைவெளி அதிகரிப்பதால், அந்நிய செலாவணி நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய மூலதன வெளியேற்றம் ஆகிய போக்குகள் அதிகரிக்கின்றன. இந்த அடுத்தடுத்த அதிர்ச்சியான செய்திகளுக்கு நடுவில் இன்னொரு திடுக்கிடும் செய்தி... தனது நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக அமெரிக்கா தனது நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்கா சமீபத்தில் கொண்டுவந்த அளவு நெகிழ்வு (Quantitative Easing) என்ற திட்டத்தை அடுத்த ஆண்டில் நிறுத்த உத்தேசித்துஉள்ளோம் என்று அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வின் தலைவர் பெர்னாங்கே அறிவித்துள்ளார். அதையடுத்து, இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது. அரசு என்ன சொல்கிறது? நாட்டின் பொருளாதாரச் சூழல் இவ்வாறிருக்க, பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும், இந்தியாவின் பொருளாதாரம் கவலைப்படும்படியாக இல்லை என்று கூறி வருகின்றனர். நடப்புக்கணக்கு இடைவெளி இன்னும் இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதைப் பற்றி யாரும் பீதியடையத் தேவையில்லை. இதுவொன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. வளர்ச்சி அடையும் நாடுகள் இதுபோன்ற சரிவை சந்திப்பது சகஜம்தான். பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் பலனைக் கொடுத்திருக்கிறது" என்கிறார் சிதம்பரம். ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் அப்படித்தான் சொல்லியாக வேண்டும். நமது பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்று கூறிவிட்டனர் என்றால், ஜோலி முடிந்துவிடும். எல்லாரும் பணத்தை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். மார்க்கெட் காலியாகிவிடும். ஒருவேளை அலுவாலியா, ரங்கராஜன், மன்மோகன் சிங் எல்லோரும் பெரிய பொருளாதார மேதைகள் என்பதால், நிலைமையை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கிறபோது நிலைமை படுமோசமாக இருக்கிறது. இதிலிருந்து மீள்வதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை" என்கிறார் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் எம்.ராமச்சந்திரன். விளைவுகள் என்னவாக இருக்கும்? வெளிநாட்டுக் கடன்கள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுகின்றன. அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் கடன்களைத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். எனவே, இந்தியாவில் இருந்து எப்போது அதிகளவில் டாலர் வெளியேறும் என்பதை அந்நிய செலாவணி சந்தையின் டீலர்களால் எளிதாக யூகிக்க முடியும். யூகத்துக்கான வாய்ப்புகள் அதிகரித்தால் நிச்சயமற்ற தன்மை உருவாகும். அதிகளவில் டாலர் வெளியேறுகிறது என்ற சூழல் உருவாகும்போது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, டாலர் மதிப்பு அதிகரிக்கும். நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து நீடித்தால் ரூபாயின் மீதான நம்பிக்கை குறைந்து, ரிஸ்க் அதிகரிக்கும். இது அந்நிய செலாவணி டீலிங்கை மேலும் குழப்பமாக்கும். அத்தகைய சூழலில் கடன் வாங்குவதும் சிரமம், கடன் கொடுப்பதும் சிரமம். எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் ஆர்.சீனிவாசன். ஏற்றுமதியால் கிடைக்கிற வரவு குறைகிறது, இறக்குமதியால் ஆகிற செலவு அதிகரிக்கிறது. அதனால், நடப்புக்கணக்கில் இடைவெளி அதிரிக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கிறபோது, நமது ரூபாயின் மதிப்பு இன்னும் சரியும் என்றுதான் தெரிகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 65, 70-க்குக்கூட போவதற்கு வாய்ப்புள்ளது" என்று கவலை தெரிவிக்கிறார், பேராசிரியர் எம்.ராமச்சந்திரன். மீள முடியுமா? இந்த நெருக்கடிகளில் இருந்து மீண்டெழ வேண்டுமென்றால், பெருமளவில் அந்நிய செலாவணி இந்தியாவிற்குள் வர வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் அந்நிய செலாவணி உள்ளே வரும். ஆனால் ஏற்றுமதி அதிகரிப்பதற்கான அறிகுறியே இல்லை. வெளிநாட்டு தொழில் நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) உள்ளே வந்தாலும் அந்நிய செலாவணி கிடைக்கும். ஆனால், தற்போதைய சூழலில் உள்ளே வருவதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். அந்நிய நேரடி முதலீடு வருவதாலும் அந்நிய செலாவணி கிடைக்கும். ஆனால், தற்போதைய சூழலில் அந்நிய செலாவணி வருவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் வரிகளை சரியாக செலுத்தவில்லை என்ற பிரச்சினை இருக்கிறது. வருமான வரி செலுத்தவில்லை என்று நிறைய கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, எந்த வழியிலும் இந்தியாவிற்குள் டாலர் வரவில்லை. இந்த மூன்றையும் தவிர்த்து இந்தியாவிற்குள் பணம் வருவதற்கு வேறு வழியே இல்லை. அந்நிய நேரடி முதலீடு வந்து, தொழில் செய்வதற்கான சூழல் இங்கு இல்லை. நிலக்கரி இல்லை. மின்சாரம் இல்லை. மாசுக்கட்டுப்பாடு விதிகள் கடுமையாக உள்ளன. இயற்கை வளங்களில் கைவைக்க முடியாத அளவுக்கு பிரச்சினை இருக்கிறது. சில்லரை விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. இன்று வரை ஒரு பைசா கூட வரவில்லை" என்கிறார் பேராசிரியர் சீனிவாசன். 2014 மே மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவிட்டன. எல்லாமே தேர்தலை நோக்கி இருக்கும் பட்சத்தில், சித்தன் போக்கு சிவன் போக்கு போல, சந்தையின் போக்கிலே நம் நாட்டின் பொருளாதாரம் போவதைத்தவிர வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை. 1991 திரும்புகிறது? அன்று: 1991-இல் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டின் தங்கத்தையே அடகு வைக்க வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. முந்தைய ஆண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 1991-92-இல் 1.3 சதவிகிதமாகக் குறைந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.6 சதவிகிதம். வேளாண் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி. பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியது. இன்று: 2012-13 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதம் குறைந்துள்ளது. நுகர்வோர் விலைப்பட்டியல் அடிப்படையிலான பணவீக்கம் இரட்டை இலக்கத்தை நெருங்கியுள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை 2008-ஆம் ஆண்டில் இருந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை விரிவடைந்துகொண்டே போகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தொடர்கதையானால், பெரும்பாலான அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறிவிடுவார்கள். அதன் விளைவாக 1991 போன்ற நிலையை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும்.
Posted on: Fri, 02 Aug 2013 16:28:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015