வீடுதோறும் கலையின் - TopicsExpress



          

வீடுதோறும் கலையின் விளக்கம் – 11 பேன் பார்க்கும் கலை நவீனமயத்தால் அழிந்து கொண்டிருக்கும், கிராமப்புற வீடுகளில், வீதிகளில் மட்டுமே நடந்து கொண்டிருக்கும் ஒரு கலை பேன் பார்க்கும் கலை. ஆண்களைப் பொறுத்தவரை, அடுத்தவரை சந்திக்க, அளவளாவ டீக் கடைகளும், முடி திருத்தும் நிலையங்களும், சாலையோரங்களும் என பல வெளிகள் இருக்கும்போது, பெண்களுக்கென இருக்கும் மிகக் குறைந்த வெளிகளுள் ஒன்றுதான் பேன் பார்க்கும் இடம், வேளை. வீடுகளில் அம்மா பெண்ணுக்கும், பெண் அம்மாவுக்கும் பேன் பார்ப்பார்கள். வீதியில் உள்ள அக்கம்பக்கத்துப் பெண்களும் ஒருவருக்கொருவர் பேன் பார்த்துக் கொள்வது உண்டு. பேன் பார்க்கும்போது, ஓர் ஆழமான அன்னியோன்னியம் எழுகிறது. ஒருவருடைய தலையையே இன்னொருவரிடம் நம்பிக் கொடுப்பதன் பின்னணியில், ஆழமான நம்பிக்கை வேண்டும், அன்பு வேண்டும். சில நேரங்களில், சில உறவுகளில் பேன் பார்த்தலில் ஒரு பாலியல் அம்சம்கூட இருக்கலாம். மனித உடலில் மிகப் பெரிய பாலியல் உறுப்பு நமது தோல்தான். அதற்கடுத்த பெரிய பாலியல் உறுப்பு மனிதத் தலை. பெண்களின் தலையும் கூந்தலும் இலக்கியங்களிலேயே பெரிதாகப் பாடப்பட்டிருக்கின்றன. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையா என்று இறைவனுக்கே சந்தேகம் வந்த கதைகளை நாம் அறிவோம். திருமணம் போன்ற விழாக்களிலே நொடிப்பொழுதில் தலையைத் தொட்டு வாழ்த்துவதைத் தவிர, பிற ஆண்களின், பெண்களின் தலைகளை நாம் பெரும்பாலும் தொடுவதில்லை; வேகமாக மேற்கத்தியமயமாகிக் கொண்டிருக்கும் நமது சமூகமும் தொட அனுமதிப்பதில்லை. இந்தப் பின்னணியில், தனது தலையை இன்னொருவரின் கைகளுக்கும், கண்களுக்கும் கொடுத்துவிட்டு, அவரது உடலோடு நெருக்கமாக அமர்ந்திருப்பது ஒரு நம்பிக்கை மிகுந்த உறவின் அடிப்படையில்தான் அமைய முடியும். கைகளும், கண்களும் பேன் பார்த்தாலும், மனங்களும், வாய்களும், காதுகளும் வேறு ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் பேசுவார்கள், மனம் திறந்து பேசுவார்கள். அவர்கள் கேட்பார்கள், மனம் நிறையக் கேட்பார்கள். அது அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்துகொள்ளும் ஓர் ஆற்றுப்படுத்துதல் தருணம். பேன் பார்த்து முடிக்கும்போது, தலையிலிருந்த பேன் மட்டும் போயிருக்காது, தலையை அமுக்கிக் கொண்டிருந்த பேன் போன்ற மனப்பிரச்சினைகளும் பகிரப்பட்டிருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவம் உயர்ந்திருக்கும், ஆற்றல் அதிகரித்திருக்கும். ஆன்மாவும், மனமும் மையப்படுத்தப்பட்டிருக்கும். கிராமப் புறங்களில் இந்தக் கலை இன்னும் ஓரளவு வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது. ஓரினச் சேர்க்கை, லெஸ்பியன் (Lesbian) உறவுகள் என்றெல்லாம் பல கதைகள் நவீன ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டாலும், பெண்கள் நெருக்கமாக அமர்வதும், தொடுவதும் கிராமங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் நகர்ப் புறங்களில் கொடும் பேன்கொல்லிகளை வாங்கிப் பூசிவிட்டு, அடுத்த வேலைக்கு ஓடுகின்றனர். பிரச்சினைகளை, மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கள் இல்லாமல், ஆணாதிக்க சமுதாயத்தின் கொடுமைகளையும் தாங்க முடியாமல், திருட்டு சாமியார்களிடமும், போலி டாக்டர்களிடமும், கள்ளஉறவுக் கயவர்களிடமும் மாட்டிக் கொண்டு சீரழிபவர்கள்தான் அதிகம். பாப்புவா நியூ கினி (Papua New Guinea) என்ற பசிபிக் (Pacific) நாட்டில் நடந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அங்கே ஒரு கிராமத்தில் இளம் பெண்கள் குடி தண்ணீர் பெறுவதற்காக சுமார் ஒரு மணி நேரம் நடந்து, எங்கோ ஒரு சுனைக்குச் சென்று எடுத்து வருவார்களாம். அதிக தூரமும், சுமையும் இந்த வேலையில் அடங்கியிருந்ததால், இளம் பெண்கள்தான் போவார்கள், போக முடியும். திடீரென அந்த கிராமத்துக்கு ஒரு பிரிட்டிஷ் வளர்ச்சித்துவ நிபுணர் (developmentalist) வந்தார். மனித வாழ்க்கையை பணம், நேரம், மேற்கத்திய வாழ்க்கை முறை எனும் அளவு கோல்களால் மட்டுமே அளந்து பழகிப் போன அந்த மேற்கத்திய நபர், இளம் பெண்கள் தண்ணீர் மொண்டு வருவதை ஒரு பிரச்சினையாகப் பார்த்து, அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று நினைத்தார். வளர்ச்சித்துவ நிபுணர் என்பதால், வழக்கம்போலவே சம்பந்தப்பட்ட மக்களோடு கலந்தாலோசிக்காமலே ஊரின் நட்டநடுவே ஓர் ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுத்தார். நல்ல, சுத்தமான நீர் ஊருக்குள்ளேயேக் கிடைக்கும்போது, இளம் பெண்கள் எங்கேயும் போக வேண்டியத் தேவை எழவில்லை. நாளடைவில் மாமியார்களின் கைகள் ஓங்கி, இளம்பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து, பல இளம் பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாயிற்று. நீண்டதூரம் நடந்து போய் தண்ணீர் கொண்டுவந்தபோது, இளம் பெண்கள் ஒருவருக்கொருவர் தங்கள் வீட்டுப் பிரச்சினைகளைப் பற்றி மனம்விட்டுப் பேச முடிந்தது, தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருந்தது. ஆனால் ஊருக்குள்ளேயே தண்ணீர் வந்தபோது, அந்த வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. சண்டைகளும், சாவுகளும் வந்து சேர்ந்தன. மனிதர்கள் மற்றவர்களின் உறவும், ஒத்துழைப்பும் அதிகம் தேவைப்படும் ஒரு விசேடப் பிராணிகள். அதனால்தான் ஜான் டன் (Johnn Donne) எனும் ஆங்கிலக் கவிஞர் “எந்த மனிதனும் ஒரு தீவு அல்ல” (No man is an island) என்று சொன்னார். நாம் ஒற்றைக் கட்டையல்ல, ஒரு தீவு அல்ல, தனிமரமல்ல. ஜான் டன் சொல்வது போல, நாம் “பரந்த கண்டத்தின் சிறந்த ஒரு பகுதி.” தோப்பில் நிற்கும் மரம். கூட்டத்தில் கூட்டத்தோடு வாழும் ஒரு பறவை. ஆனால் நவீனமயத்தாலும் (modernization), இயந்திரமயத்தாலும் (mechanization), பணமயத்தாலும் (monetization) மனித உறவுகளை வெட்டிவிட்டு, இயற்கையோடு உள்ள உறவுகளையும் அறுத்துவிட்டு, அடுக்குமாடி வீடுகளில், அப்பார்ட்மெண்டுகளில் (apartments) அன்னியப்படுத்தப்பட்டு அலங்கோலமாய் கிடக்கிறோம். நாம் அமெரிக்கர்களாகிக் கொண்டிருக்கிறோம். பணலோக ராச்சியம் சமீபித்திருக்கிறது. நாம் இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அலைகிறோம். அப்போதுதான் சிறந்த மருத்துவர்களிடமும், மனோதத்துவ நிபுணர்களிடமும் போய் உயர்தர சிகிச்சைப் பெற முடியும். மன அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும். வாழ்க்கையை வாழ முடியும். வாழுங்கலை எப்படி வந்து முடிகிறது பாருங்கள். பேன் பார்த்து மனிதராய் வாழ்கிறோமா? அல்லது பணம் பார்த்து திருட்டு சாமியாரோடு, போலி டாக்டரோடு தாழ்கிறோமா? சுப. உதயகுமாரன் இடிந்தகரை யூலை 31, 2013
Posted on: Wed, 31 Jul 2013 07:11:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015