தர்மபுரி வினோத்: 94888 48222 (Dial for - TopicsExpress



          

தர்மபுரி வினோத்: 94888 48222 (Dial for Blood) =============================== வினோத் வெளியூர் செல்லும் போது அணியும் டி-சர்ட் "Dial for Blood 94888 48222" என்ற வாசகங்களோடு இருக்கும். அன்று தர்மபுரியில் ரயில் நிலையத்தில் இந்த டி-சர்ட்டை பார்த்த ஒரு இளைஞர் "எல்லாம் காசு சம்பாரிக்கும் ஏமாற்று வேலை" என கமெண்ட் அடிக்க, வினோத் கோபப்படாமல் பத்து நிமிடம் அவருக்கு ரத்த தானத்தின் அவசியத்தையும், உயிர்காக்கும் விதத்தையும் விளக்கி விட்டு ரயிலேறி விட்டார். மதியம் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஃபோன். "வினோத், ஒருத்தர் ரத்தம் கொடுக்க வந்தார். முதல்முறை என்றார். நீங்கள் சொன்னதை கேட்டு வந்ததாக சொன்னார். நன்றி." மறுநாள் காலை மற்றொரு ஃபோன். "சார், நேத்து தர்மபுரியில் ரயில்வே ஷ்டேசன்ல பார்த்தேனே, நீங்க சொன்னத கேட்டு மனம் மாறி ரத்ததானம் செய்தேன். மாலை உடையாம்பட்டி அருகே எனக்கு பைக் ஆக்சிடெண்ட். ஆப்ரேஷனுக்கு ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது "O-". எங்கும் கிடைக்காமல் நான் கொடுத்த ரத்தம் தான் என்னையே காப்பாற்றி இருக்கிறது. நினைச்சா பயமாயிருக்கு. நீங்க சொன்னத கேட்டதால் தான் உயிரோடிருக்கிறேன். மிக்க நன்றி" ரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத், Indian Pillars என்ற அமைப்பை துவக்கி ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக 24x7 இயங்கும் கால் செண்டர் துவங்கியிருந்த நேரம். மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை. அவருக்கு ரத்தம் தேவை. அவரது ரத்தம் "O bombay" பிரிவு. 15000 பேரில் ஒருவருக்கே இந்த இந்தப் பிரிவு இருக்கும். அன்று விடுமுறை நாள் என்பதால் எங்கு தொடர்பு கொண்டும் கிடைக்காமல் தர்மபுரி Indian Pillars அமைப்பிற்கு தொடர்பு கொள்கிறார்கள். மாலை இந்த "O bombay" பிரிவு ரத்தம் கேட்டு அழைப்பு வந்த உடன் தங்களிடம் உள்ள மூன்றரை லட்சம் பேர் கொண்ட data base-ல் தேடி மேட்டூர் அருகே இருந்த ஒருவரை கண்டுபிடித்தனர். அவரை தொடர்பு கொண்டு சேலம் வர செய்து ரத்தம் சேகரித்த போது இரவாகிவிட்டது. அதற்குள்ளாக அதனை இந்தூர் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கோயம்புத்தூரில் இருந்து icepack box-ஐ வரவழைத்தார்கள். சேலத்திலிருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்தில் ரூ 900 செலவு செய்து அனுப்பப்பட்டது. அங்கிருந்து இரவே விமானம் மூலம் ரத்தம் இந்தூரை சென்றடைந்தது. ( விமானத்தில் ரத்தம் அனுப்பினால் இலவசம்) விடியற்காலை வினோத்தின் செல் ஒலிக்கிறது. தூக்கக் கலக்கத்தில் செல்லை எடுத்தால், புரியாத இந்தியில் பேசுகிறார்கள், கடைசியாக சொன்ன "தன்யவாத்" மட்டுமே தெரிந்த வார்த்தை, நன்றி. காலை அங்கிருந்து டாக்டர் தொடர்பு கொண்டு உரிய நேரத்தில் ரத்தம் வந்து சேர்ந்து, இரவே அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் நோயாளி காப்பற்றப்பட்டதை சொல்லி, நன்றி சொல்லியிருக்கிறார். இந்த சேவை அனைத்தும் இலவசம். யாரிடமும் உதவி கேளாமல் நண்பர்கள் துணையோடே, இந்த உயிர் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார் வினோத். "இந்த பாராட்டு, நன்றி போலவே திட்டும்,வசவும் சகஜம் சார். எதுவாக இருந்தாலும் உயிர் காக்கப்பட்டால் போதும் சார்." இது தான் வினோத். மற்றொரு நாள், அதே டி-சர்ட் பார்த்து விளக்கம் கேட்ட ஒரு சென்னை கல்லூரி மாணவி தன் விவரங்களை அளித்துள்ளார். அன்று இரவு சென்னையிலிருந்து ரத்தம் கேட்டு அழைப்பு. ரயில் பயணம். முக்கிய எண்களை கொண்ட மற்றொரு செல் சார்ஜ் போய் அணைந்து போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் பையிலிருந்த பேப்பர்களை துழாவுகிறார். அந்தக் கல்லூரி மாணவியின் விபரத்தை பார்த்தால் அதே ரத்த வகை. செல்லில் தொடர்பு கொண்ட வினோத் விபரத்தை சொல்ல அந்த பெண் உடனே கிளம்ப தயாராகிறார். இரவு மணி 11. துணைக்கு யாராவதை அழைத்து செல்ல சொல்ல, "அம்மா தூங்குகிறார், நான் தனியா போய் கொடுத்துடறேன்" என்கிறார். மனம் கேளாத வினோத் லேண்ட்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்கிறார். போனை எடுத்த தாயாரிடம் விளக்கினால்,"நீயெல்லாம் அக்கா,தங்கச்சியோடு பிறக்கலையா, இந்த நேரத்தில் எப்படி போவது?" திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறார். உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மீண்டும் போன் செய்கிறார். பத்து நிமிடம் திட்டி தீர்த்து, வினோத் பேசியதை கேட்டு மனம் மாறி அவரே மகளை அழைத்து சென்று ரத்த தானம் செய்கிறார். இப்போது அவர்கள் ரெகுலராக ரத்த தானம் செய்கிறார்கள் மனம் உவந்து. ரத்த தானத்திற்கான கால்செண்டர் துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஜூன் 14 , காரணம் அன்று உலக ரத்ததான தினம். எதேச்சையாக அதுதான் வினோத்தின் பிறந்ததினமும். ரத்ததானத்திற்காகவே பிறந்திருப்பார் போலும்... சொந்த வேலையை பார்க்காமல், சம்பாரிப்பதையும் செலவு செய்து இப்படி பொதுப் பணியாக இருக்கிறாரே என்ற பெற்றோர் கோபத்திலும் பணியை தொடர்கிறார். கல்லூரி விடுமுறை என்றால் ரத்ததானம் குறைவாக இருக்குமாம். ஜூன் மாதம் Indian Pillarsஐ தொடர்பு கொண்டு 100 முகாம் நடத்தி ரத்தம் திரட்டி கொடுக்க கேட்கிறார்கள். டீம் களத்தில் இறங்கியது. இந்தியா முழுதும் தொடர்பு கொள்கிறார்கள். போன் மூலம் பேசியே முகாம் நடத்த இடம் ஏற்பாடாகிறது. முகநூல் மூலம் ரத்ததான முகாம் செய்தி பகிரப்படுகிறது. பேப்பர் விளம்பரமோ, பிட் நோட்டீஸோ கிடையாது. ஜூலை 5 அன்று இந்தியா முழுதும் 400 முகாம் நடத்தப்பட்டு 11,500 யூனிட் ரத்தம் திரட்டப் பட்டிருக்கிறது. மிகப் பெரிய சாதனை. உடன் படித்த நண்பர் பாலாஜி, உறுதுணையாக இருக்கும் நண்பர் தாஜுதீன், பணிகளை பார்த்து தானாக உதவிட முன்வந்த அரசு பணியிலிருக்கும் பொறியாளர் சிவக்குமார், அவரது துணைவியார் வங்கி மேலாளர் பாமா என கோர் டீம். தர்மபுரி எம்.எல்.ஏ பாஸ்கர் இவர்கள் பணிக்கு ஆதரவு. பிரதிபலன் பாராமல் உதவிடும் வாலண்டியர்களாக, படித்த, பணியிலிருக்கும் இளைஞர்கள் என ஒரு படையின் உழைப்பாக உயிர்காக்கும் சாதனை. இந்தியாவின் எந்த மூலையில் ரத்தம் வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்க Indian Pillars Call Centre : 94888 48222. இன்று இவர்களின் தர்மபுரி அலுவலகம் சென்று வந்தேன். இவர்களின் ஒரே கோரிக்கை அரசு ஒரு டோல் ஃபிரீ எண் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தால், இன்னும் பல மடங்கு பணி விரிவடையும். ##உயிர்காக்கும் பணியில் நம் பங்கும் ஒரு துளி இருக்கட்டும். Indian Pillars பக்கத்தை like and share செய்யுங்கள் ! @Mohamed Ali
Posted on: Mon, 19 Aug 2013 18:26:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015